Wednesday, 30 January 2013

ஈருடல் ஓருயிர் - அனுபவ வாழ்க்கை கட்டுரை(பகுதி -1)





"ஈருடல் ஓருயிர்" என்பதற்கு Google-இல் விளக்கம் தேடி பார்த்தேன் நான் தேடிய விளக்கம் சரியாக எனக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .....  

"ஈருடல் ஓருயிர்" விளக்கம் எல்லாம் திருமணம் ஆன அன்றைய  நாளை மட்டுமே எல்லாரும் குறிப்பிட்டு எழுதி உள்ளார்கள். ஆனால், அதன் பின் இருவரும் இணைந்து வாழப்போகும் வாழ்க்கை பற்றியும்,அதை எப்படி கணவன் மனைவி இருவரும் கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும் யாரும் யோசித்து எழுதவில்லையே என்று கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.

  • "ஈருடல் ஓருயிர்"-என்றால் என்ன?

  • "ஈருடல் ஓருயிர்" போல் கணவன் மனைவி வாழ்ந்தால் அந்த குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் எப்படியெல்லாம் சமாளித்து குடும்பத்தை அன்பாக கொண்டு போகிறார்கள். இதனால் ஏற்ப்படும் சில விபரீதங்கள் என்ன? இப்படி எத்தனை பேர் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், என்று எனக்கு தெரிந்த சில உண்மை சம்பவங்களை பகுதி வாரியாக எழுதுகிறேன்.

  •  "ஈருடல் ஓருயிர்" போல் கணவன் மனைவி வாழவில்லை என்றால் அந்த குடும்பத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும், அதை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள். அதனால் பிரிந்த குடும்பங்கள் எத்தனை என்பதையும் இதில் பார்ப்போம்.

  • இந்த கலிகால உலகில் எப்படி எல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்,கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள்.


சரி முதலில் திருமண நாளைப் பார்க்கலாம்:
          ஏன் என்றால் இதில் இருந்து ஆரம்பிப்பது தான் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவு வாழ்க்கை நடத்தும் போராட்டம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என இன்னும் உள்ளது.  ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையின் ஆரம்பமே இதில் இருந்துதான்.

  1. சிலர் திருமணம் நிச்சயம் செய்த நாளில் இருந்து திருமணம் செய்யப் போகும் பெண்ணிடம் பேசி  ஒருவரை ஒருவர் தெரிந்தும் புரிந்தும் கொள்ளுவது வழக்கம்.
  2. சிலர் கொஞ்சம் வித்தியாசம். திருமணம் செய்த பின்பு பேசி, பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து .
  3. சிலர் காதல் செய்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின்  திருமணம் செய்வார்கள்.  அவர்களில் எத்தனை நபர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்திருக்கிறார்கள்.  எத்தனை பேர் பேருக்கு நாங்களும் காதல் திருமணம் செய்திருக்கிறோம்.  ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம், என்று பெருமைக்கு மாவு இடிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
                                                      ~ ~ ~ ~ ~ ~
          (இதில் சிலரது சம்பவங்களை அவர்களது அனுமதியுடன் தான் இதில் எழுதிருக்கிறேன். சிலரிடம் அனுமதி கேட்கவில்லை அவர்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவும். எல்லாரிடமும் சில விஷயங்களை என்னால் பேச்சில் சொல்லிப் புரியவைக்க முடியவில்லை.எனவே இப்படி ஒரு கட்டுரை போல எழுதி உள்ளேன். இதை எழுதுவதற்கும் என்னிடம் சில காரணங்கள் உள்ளன. என் உடன் பிறக்காத சில அண்ணன்,தங்கைகளின் வேண்டுகோளுக்காக செய்கிறேன். இதில் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால்,அல்லது  இதில் தவறேதும் இருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். இதை யாரேனும் படித்து புரிந்து கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் மிக்க மகிழ்ச்சி.)

  1. முதலில், சிலர் நிச்சயம் செய்த நாளில் இருந்து  திருமணம் செய்யப் போகும் பெண்ணிடம் பேசி  ஒருவரை ஒருவர் தெரிந்தும் புரிந்தும் கொள்கிறார்கள்.  இது இப்போது உள்ள தலைமுறையினர் செய்யும் வழக்கம் என்பது நாம் தெரிந்த ஒன்று. அதைப் பற்றி கீழே சில உண்மை சம்பவங்களைப் பார்ப்போம். அதன் பின் அதில் என்ன தவறு, அதை எப்படி சரி செய்திருக்கலாம் என்று பார்ப்போம்.


  • நான் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது: கோவையில் நடந்த சம்பவம் இது. ஒரு அழகான குடும்பம் கணவன் மனைவி ஒரு மகன் என சின்ன குடும்பம் தான், இருந்தாலும் மகன் மீது தாய் வைத்திருந்த பாசத்திற்கு அளவே இல்லை. அப்படித் தான் மகனும் நடந்து கொண்டார்கள். மகனுக்கு பெண் பார்க்கும் நாள் வந்தது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான் (பெயர் சொல்ல விரும்பவில்லை). அழகான கூட்டுக்குடும்பம். அவன் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.அவன் மனைவி ரொம்ப நல்ல பொண்ணு, படிச்ச பொண்ணு, பண்பு தெரிந்தவள் என்று சொல்லாத ஆட்கள் இல்லை. அவர்களின் வாழ்க்கை பூந்தோட்டம் போல இருந்தது. திருமணத்திற்குப் பின் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். அவள் தாய்மை அடைந்தாள். அவள் தாய்மை அடைந்ததும் அவன் அவளைத் தங்கத் தட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதை போல நன்றாக அவளைக்  கவனித்துக் கொண்டான். அவள் மீது அவன் வைத்த பாசத்திற்கு அளவே இல்லை. அதன் பின் தான் அவளின் பூந்தோட்டமான வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைவனம் போல மாற ஆரம்பித்தது. ஆமாம், அவன் மனைவி மீது அவன் காட்டும் பாசம் அவன் தாய்க்குப்  பிடிக்கவில்லை. அவன் வேலைக்குச் சென்ற பின் அவளை ஏதேனும் குறை கூறுவதும், தவறு சொல்வதுமாக இருந்தது.  ஆனால், அவள் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கணவனிடம் இது பற்றி ஒன்றும் சொல்வது இல்லை.அவன் அம்மா ஏதும் அவனிடம் அவளைப் பற்றி குறை சொன்னால்,அவள் நான் இனி எந்த தவறும் செய்ய மாட்டேன்,எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்கிறேன். எந்த தவறும் இனி நடக்காத மாதிரி பார்த்துக்கிறேன் என்று அவள் அத்தையிடம் சொல்லுவதோடு சரி,அதை பற்றி தன் கணவனிடம் எந்த ஒரு பிரச்சனையையும் காட்டிக்கொள்ள மாட்டாள்.  அவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டி விட நிறைய திட்டங்கள் செய்தும் அந்தத் தாயின் திட்டம் ஒன்றும் பலிக்கவில்லை.அந்த வீட்டில் அந்த பெண்ணுக்கு அவள் அத்தையால் தினம் தினம் கொடுமைகள் ஆரம்பித்தது. அவன் வெளியில் கூட்டிக்கொண்டு போவதாக இருந்தால் அவன் அம்மா ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி விடுவார்களாம்.அவனும் சரி என்று சொல்லி விடுவானாம். அவளும் வீட்டில் நடக்கும் எதையும் கணவனிடம் சொல்லாமல் வைத்திருந்திருக்கிறாள். இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் ஒரு நாள் வந்தது. அது அந்தப் பெண்ணின் பிரசவநாள். ஆண்டவனும் அவளுக்கு சதி செய்துவிட்டான், என்ன என்றால் பத்தாவது மாதம் பிறக்க வேண்டிய குழந்தை எட்டாவது மாதத்தில் பிறந்துவிட்டது. அவன் தாய் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், தன் மகனை அழைத்து இது உன் குழந்தை இல்லை, வேறு யார் குழந்தையோ, நாம மோசம் போய்விட்டோம். இந்தப் பெண் கெட்டுப் போனவள் என்று கொஞ்சம் கூட வாய் கூசாமல் பொய் சொல்லியிருக்கிறாள். இதை அறையினுள் கேட்டுக் கொண்டிருந்த அந்தப்  பெண் அப்போது தான் தான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணி அழுதாள். ஆம் வீட்டில் தினமும் நடக்கும் சம்பவங்கள் எதையும் தன் கணவனிடம் சொல்லாமல்,மறைத்து வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது தான் அவளுக்குத் தெரிய வந்தது, இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என அந்தப் பெண் சிறிதும் யோசிக்கவில்லை.தன் கணவனை உள்ளே அழைத்தாள். அதுவரை அந்த வீட்டில் நடந்த அனைத்து விபரங்களையும் எடுத்துச் சொல்லி அழுதாள். இதுவரை சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன் என்றாவது ஒரு நாள் சரி ஆகிவிடும் என்று நம்பினேன். ஒரு மகளாக என்னை நினைக்காவிட்டாலும் சரி,அவர்களைப் போல நானும் ஒரு பெண் தான் என்பதை சிறிதும் நினைக்காமல்  எப்போது என்னைப் பற்றி  இப்படி என் கற்ப்பை பற்றி தவறாக சொல்ல ஆரம்பித்தார்களோ இனி என்னால் இங்கு இருக்க முடியாது. நாளை இது போல் வேறு ஏதும் கூட என்னைப் பற்றிச் சொல்லலாம் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கவும். அவன் அம்மாவும் அதைக் கேட்டுக் கொண்டு தான் பக்கத்தில் தலை குனிந்து நின்றார்களாம். அவனும் அம்மாவிடம் இதெல்லாம் உண்மையா, ஏன் இப்படியெல்லாம் செய்தீர்கள் என்று அவன் கேட்டதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் அவன் தாய் நின்றதைப் பார்த்து. இனி நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன், உங்கள் முகத்தில் கூட இனி முழிக்க மாட்டேன் உங்களுக்கு மகன் இருந்ததை மறந்து விடுங்கள் என்று சொல்லி விட்டு, மருத்துவமனையில் இருந்த அவன் குழந்தையையும், மனைவியையும், அழைத்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டான்.இப்போது அவன் பெங்களூரில் தன் மனைவி குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்கிறான்.தவறு செய்த தாய் அதை எண்ணி அழுது கொண்டு, தனக்கு இருந்த ஒரு பையனையும் இழந்து விட்டோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இப்படி எல்லாம் பாசம் வைக்க வேண்டி தான், அப்படி வைக்கிற ஒவ்வொரு தாயும் தன் மகனுக்குத்  திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாது. திருமணம் என்ற பெயரில் வரும் மருமகளை ஏன் இப்படி கொடுமைப்படுத்த வேண்டும்.

எந்த ஒரு பெண்ணும் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போது தனக்கு அங்கும் ஒரு தாய் இருப்பதாக நினைத்துத் தான் செல்கிறாள்.ஆனால், அவர்கள் மட்டும் ஏன் சில நேரங்களில் பிரித்துப் பார்க்கிறார்கள். திருமணம் முடியும் வரை என் மகள் மாதிரி என்று சொல்லிவிட்டு. திருமணம் முடிந்த பின், பிறந்த வீட்டை இழிவாக பேசுவது .ஆனால் தானும் ஒரு மருமகளாக வந்தவள் தான். தனக்கு அந்தக் கால கட்டத்தில் நடத்தது எல்லாம் நம் மருமகளுக்கும் நடக்கக் கூடாது அதை நாம் தான் கவனமா பாத்துக்கணும்,ஏதும் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று ஏன் எந்த ஒரு அத்தையும் நினைப்பது இல்லை.எங்க வீட்டு பொண்ணுன்னு அடிக்கடி சொல்லுவாங்க ஏதும் வீட்டுக்குள்ள நடக்கிற சில விஷயத்தில் கூட பிரிச்சு பேசுவாங்க என்னதான் இருந்தாலும் நீ அடுத்த வீட்டு பொண்ணு தான,இப்போ வந்தவ தான அப்படின்னு நாம மறந்து இருக்கிற சில விஷயங்கள கூட ஞாபகப்படுத்துவார்கள். ஹ்ம்ம் கேட்டா வேற ஏதும் கதை சொல்லுவாங்க......

இந்த கதையில் சொல்லப்பட்ட கணவன் மனைவி ஈருடல் ஓருயிர் போல் வாழ்ந்ததால் தான் தன் மனைவியின் நிலையை கணவனால் உணர முடிந்தது.  இந்த கணவன் மனைவி இருவரும் ஈருடல் ஓருயிர் போல் வாழவில்லை என்றால் இந்நேரம் அவர்கள் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டில் இருக்க வேண்டி இருக்கும். இவர்கள் வாழ்க்கை முறையும் மாறிப்போய் இருக்கும். இது போல் இன்னும் எத்தனைபேர் இந்த உலகில் வாழ்கிறார்கள் என்று பார்த்தால் அது மிகவும் குறைவுதான். அடுத்து நான் சொல்லப் போகும் கதை ராமேஸ்வரத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இதை பகுதி-2 இல் பார்ப்போம்.

ஈருடல் ஓருயிர் என்று கவித்துவமாக நாம் பேசுவதுண்டு. ஆனால், ஆஸ்திரேலிய நீலமலையில் இரண்டு வெவ்வேறு இன மரங்கள் தற்செயலாக ஒன்றுடன் ஒட்டி உறவாட, பின் பிரியமுடியாதபடி இரு உடல் ஒரு உயிர் என்று கலந்துவிட்ட காட்சி.
http://photo-view.blogspot.com.au/2006/06/blog-post_115079680234453588.html